பார்த்த,படித்த செய்திகள்

அட்சயதிருதி என்றால் என்ன?.

Thursday, May 01, 2014

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள்.அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்சய திருதியை அன்று எதுவும் வாங்கலாம்!

அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், தங்கம் வாங்கினால் மட்டுமே தங்கும்; பெருகும் என்பதில்லை. அன்றைய தினம் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பதுதான் ஐதீகம்.சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம்.மகா விஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி இடம் பெற்றமை, பரசுராமர், பலராமர் போன்றவர்கள் அவதரித்த நாள் போன்றன இந்த அட்சய திருதியை நாள் என்றே இதிகாசங்கள் கூறுகின்றன. வறுமையில் வாடிய குசேலன் தனது நண்பனான கிருஷ்ணனை பார்க்கச் சென்ற பொது கொண்டு சென்ற மூன்று பிடி அவலை உண்டு பதிலாக கோடி கோடியாக செல்வங்களைக் அள்ளிக்கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நாள் என்றே கூறப்பட்டுள்ளது.பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது உணவுக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் அட்சய பாத்திரத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத உணவுப்பொருட்களைப் பெற்று புசித்ததாகவும் மகாபாரத கதையில் சொல்லப்பட்டுள்ளது.சிவபெருமான் தன் பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டதும், துச்சாதனன் பாஞ்சாலியின் புடவையை உருவிய பொது கண்ண பரமாத்மா அட்சய என்று கூறி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாள் என்றும் அதனால் அட்சய திருதியையில் எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்றும் இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது போன்றன அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும் எனவும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக அன்னை லட்சுமி விளங்குகின்றாள்.அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். உப்பு, அரிசி மற்றும் தேவையான ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என எதை வேண்டுமானாலும் வாங்கலாம். பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம் போன்றனவற்றை இந்தநாளில் செய்வது நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது
நன்றி:தினமலர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP