பார்த்த,படித்த செய்திகள்

ஜாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி

Thursday, February 27, 2014

எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன தேவை?
பொருளாதார மற்றும் சமூக  நிலைகளில் பின்தங்கி  இருப்பவர்களை முன்னேற்றும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தருவது உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்துள்ளது. இவற்றைப் பெறுவதற்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியமாகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவை பெரும்பாலும் தேவைப்படும். எனவே இந்தச் சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது, இந்தச் சான்றிதழ்களின் பயன்பாடு என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

ஜாதிச் சான்றிதழ் 
ஒருவர் தமிழக அரசின் ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.
ஜாதிச் சான்றிதழ் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேருபவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. இச்சான்றிதழ் ஒரு தற்காலிகச் சான்றிதழே. ஏனெனில் எவரும் ஜாதியை மாற்ற முடியாது.

ஆனால் வகுப்பு மாறலாம். அதாவது ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, வேறு வகுப்பிற்கு சென்றுவிடுவார். அதாவது, ஆங்கிலத்தில் community certificate என்று அழைக்கப்படும் இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றே அழைக்கப்பட வேண்டும். ஆனால், ஜாதிச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படுகிறது. எனவே, ஜாதியை மாற்ற முடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானதல்ல. எனவே, ஜாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதம் மாறினால்:
மாணவர்களின் பெற்றோர் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது ஜாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிற காரணங்கள்:
கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக இச்சான்றிதழ் தேவைப்படலாம். உதாரணமாக இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை, குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.

எங்கே விண்ணப்பிப்பது?
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது வட்டாட்சியரின் பணிகளில் ஓர் எளிமையைக் கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவதற்காகவே.

ஒருவருக்கு குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் ஜாதிச் சான்றிதழே வழங்க முடியாது என்று கூற முடியாது. வேறு ஆவணங்கள் ஏதும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. இப்படி மனு அளிக்கும்போது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற காலதாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது.

ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம்தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகம். அவர்களே பொதுமக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால்தான் பொதுமக்கள் கேட்கும் சான்றிதழை வழங்க முடியும் என்று கூறுவது முறையல்ல.

எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாதபோது, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.

அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல.

ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.


வருமானச் சான்றிதழ்

ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமானச் சான்றிதழாகும்.

வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேருவதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும் அரசுப் பணிகளில் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழாக அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.

ஆண்டு வருமானம் பன்னிரண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரண்டுக்கும் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஒட்ட வேண்டியது இல்லை. வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.

ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டல துணை வட்டாட்சியர்களும், அதற்கு மேல் ரூபாய் மூன்று லட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர்
 நன்றி : புதிய தலைமுறை
               இவள் பாரதி
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP