பார்த்த,படித்த செய்திகள்

தியானம் பழகு

Monday, April 14, 2014



'தியானம்  பழகு
ருவர் ஓஷோவிடம் கேட்டார். ''என்னுடைய நேரத்தைச் செலவு செய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?'' 
''தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழலை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவிட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தைத் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கைவசம் இருக்கும் விதை துளிர்விட்டுவிடும். நீங்கள் வளர ஆரம்பிப்பீர்கள்'' என்றார் ஓஷோ.

இதுதான் தியானம். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான சாவியைத் தியானம் உங்கள் கையில் தருகிறது.
சரி... தியானத்தால் அறிவியல்பூர்வமாக நன்மைகள் இருக்கின்றனவா? அதற்கு என்ன ஆதாரம்? எத்தனை பேர் சாட்சி?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான 'மைண்ட் - பாடி மெடிக்கல் இன்ஸ்டிடியூட்என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் இதுபற்றி ஒரு ஆய்வு செய்திருக்கிறார். ஒருவரை தியானம் செய்யவைத்து 'உடலுக்குள் என்ன நடக்கிறது?’ என்று நடத்தப்பட்ட ஈஈஜி  (Electro Encephalography (EEG) பரிசோதனையை ஹெர்பெர்ட் பென்சன் தலைமையில் டாக்டர்கள் குழு ஒன்று கண்காணித்தது.
ஆய்வின் முடிவில், 'தியானம் செய்யும்போது பல வேதியியல் மாற்றங்கள் நடந்து உடலைத் தளர்வாக்குகின்றன. இந்த ரிலாக்ஸேஷன் மூலம் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், மூளையின் வேதியியல் செயல்கள் எல்லாமே சீராகின்றனஎன்ற முடிவுக்கு வந்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார். உலகம் முழுவதும் இதுபோல் இன்னும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன.

கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகள் குறைகின்றன, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, போதைப் பழக்கங்களை மறக்க வைக்கிறது, வயதாவதைத் தாமதப்படுத்தி இளமையோடு இருக்க வைக்கிறது, சுய மரியாதையை அதிகமாக்குகிறது, இயல்பான தூக்கம் வர உதவுகிறது, விழிப்பு உணர்வு அதிகமாகிறது என்று ஒவ்வொரு மருத்துவக் குழுவும் தனித்தனியாகத் தங்களது ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்து இருக்கின்றன.
''நோயைக் குணப்படுத்துவதைவிடவும், நோய்பற்றிய புரிதலை ஏற்படுத்துவதுதான் நல்ல மருத்துவம். நோய் ஏன் வருகிறது, மீண்டும் வராமல் தடுப்பது எப்படி என்று சிகிச்சை அளிக்கும் மருத்துவம் தியானம்'' என்கிறார் அவசர சிகிச்சை நிபுணரான தவப்பழனி.
''டென்ஷன், மன அழுத்தம் இரண்டும்தான் எல்லா வியாதிகளையும் நமக்கு வரவழைக்கின்றன. தியானம் செய்யும்போது, மனம், உடல் இரண்டும் அமைதியாகிவிடுகின்றன. சாதாரணமாக, ஏதாவது ஒரு பிரச்னை என்றால், 10 முதல் 1 வரை பின்னோக்கி மெதுவாக எண்ணுங்கள் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் உள்ள சூட்சுமம்... பின்னோக்கி எண்ணும்போது சுவாசம் சீராகி, அந்தப் பதற்றத்தைக் குறைத்துவிடும். தியானமும் இப்படித்தான் நமக்குள் வேலை செய்கிறது. இது தவிர, தேவை இல்லாத பதற்றம், கோபம் எல்லாவற்றையும் சாந்தப்படுத்திவிட்டால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று எதுவுமே வராது. தியானத்தின் மூலம் போபியாக்கள் என்று சொல்லப்படும் தேவையற்ற பயங்களைப் போக்க முடியும், அலர்ஜியைக்கூட தெரபி மூலம் சரி பண்ணலாம். தியானத்தால் நிச்சயமாக மருத்துவப் பலன்கள் உண்டு'' என்கிறார் தவப்பழனி.

சரி.. தியானம் எப்படிச் செய்வது? யோகா ஆசிரியை மேனகா தேசிகாச்சார் இதுபற்றி விளக்குகிறார்.
''தியானம் என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. அதை உடனே செய்துவிட முடியாது. முதலில் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்து பழக வேண்டும். பத்மாசனத்தில் அமர்ந்துதான் தியானம் செய்ய வேண்டும். அதற்கு உடலும் மனதும் உடன்பட வேண்டும். தியானத்துக்கு ஒருவரைத் தயார்ப்படுத்தும் விதமாகத்தான் முதலில் யோகாசனம், இரண்டாவது கட்டமாக, பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, நிறைவுக் கட்டமாகத்தான் தியானம் செய்ய முடியும். இதனால்தான், தியானம் என்பது அஷ்டாங்க யோகத்தில் கடைசியில் வருகிறது.
அதுவும் தியானம் செய்யும்போது, உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் வேறு எந்த நினைவுகளும் வரக் கூடாது. ஆனால், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தியானம் செய்யும்போது எதைப் பற்றியாவது சிந்தனை வந்தால்... நினைவுகளை விரட்ட வேண்டிய அவசியம் இல்லை. அந்த நினைவுகளை நாம் விலகி நின்று கவனிக்க வேண்டும். தியானம் செய்ய ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் உதவுகின்றன. ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நாம் மூச்சுவிடுவதும் சீராக இல்லாமல் இருக்கிறது, அந்தக் குறைபாட்டைப் போக்கத்தான் மூச்சுப் பயிற்சி.
சந்நியாசிகள் 24 மணி நேரமும் சமாதி நிலையிலேயே இருப்பார்கள். சம்சார வாழ்க்கை வாழும் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. அதனால், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது தியானம் செய்தால், மருத்துவரீதியாக நல்ல பலன் கிடைக்கும். தியானம் செய்ய விரும்புபவர்கள், முறையாக ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு செய்வதே சரியானது'' என்கிறார்.

நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் இன்னும் கொஞ்சம் நுட்பமாக இதை விளக்குகிறார்... ''இதயத்தின் துடிப்புகளை ஈ.சி.ஜி. மூலம் அளப்பதுபோல், மூளையின் செயல்பாட்டை ஈ.ஈ.ஜி. மூலம் 'சைக்கிள்ஸ் பெர் செகண்ட்ஸ்’ (Cycles per seconds)  என்று அளப்பார்கள். தியானத்தின்போது மூளையில் இருக்கும் ஆல்ஃபா அலைகள் தீட்டா அலைகளாக (பீட்டா அலைகள் அல்ல) மாறுகின்றன. ஒரு வினாடிக்கு 9 முதல் 13 சைக்கிள்ஸ் என்ற அளவில் இருக்கும் ஆல்ஃபா அலைகள், 4 முதல் 8 என்று தீட்டா அலைகளாகக் குறையும். இன்னும் ஆழ்ந்த தியானத்துக்குச் செல்லும்போது, படிப்படியாக 1.5 என்கிற டெல்டா நிலைக்கு வரும். இதற்கு 'எப்ஸிலான் நிலைஎன்று பெயர். நம் உடலில் இருக்கும் லட்சக்கணக்கான நரம்புகளின் சங்கமம் மூளை என்பதால், இந்த 'எப்ஸிலான் நிலையில் நரம்பு மண்டலம் முழுவதும் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
தியானம் செய்வதால் ரத்த அழுத்தம், உடல் வலி மற்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவற்றை முதலிலேயே வராமல், தடுக்க முடியும். வந்துவிட்டாலும் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்'' என்கிறார்.
முக்கியமான ஒரு விஷயம், கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வேண்டும் என்பது இல்லை. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தியானம் கற்றுக்கொடுக்கச் சென்றார் டி.கே.வி.தேசிகாச்சார். ''நாராயண நமஹ என்று தியானியுங்கள்'' என்று அவர் சொல்ல, ''ஞாயிறு போற்றுதும் - என்று தியானிக்கலாமா?'' என்று கேட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர். 'இரண்டும் ஒன்றுதான்என்று சம்மதம் சொல்லி இருக்கிறார் தேசிகாச்சார்.
எனவே, உங்களுக்குப் பிடித்த நல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் ஒரேயரு இனிய விதி!
ஓகே..
இப்போதே ஒரு குட்டி தியானத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா? மெதுவாகக் கண்களை மூடுங்கள்...
10... 9... 8... 7...
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP