‘அதைச் செய்ய உனக்குச் சக்தியிருந்தால் செய். இல்லையேல், சிவனேயென்று
இரு’. இந்த வாக்கியத்தை நாம் அன்றாட வாழ்க்கையில் பலமுறைகள் பேசியும்,
கேட்டும் இருப்போம். அதாவது, ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்றால்
‘சக்தி’ என்ற செயல்திறன் தேவையாக உள்ளது. அது, உடல் திறனையோ, மன திறனையோ
குறிப்பிடக்கூடிய ஒரு சாதாரணச் சொல்லாக இருந்தாலும்கூட, அதன் உள்ளார்ந்த
அர்த்தம் இயற்கைக்கும் நமக்கும் உள்ள ஒத்திசைவையின் அளவீட்டையே
குறிக்கிறது. அந்த ஒத்திசைவு மனிதர்களுக்கிடையேயானாலும் சரி, அணுவுக்குள்
சுற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயானாலும் சரி, அல்லது உலக
நாடுகளுக்கிடையேயானாலும் சரி, எல்லாவற்றிற்குமான ஒரு நிச்சயத் தேவையாகவே
அது உள்ளது. அந்த ஒருங்கிணைப்புத் திறனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்,
ஆன்மிக ரீதியாகவும் நம்முடைய ஆன்மிகச் சடங்குகள் எவ்வாறு கொண்டு
செல்கின்றன என்பதை ஆன்மிக அறிவியல் நோக்கில் இங்கு நாம் பார்க்க
இருக்கிறோம்.
நமது ஆன்மிகத்தில் இறையை பெண்மையின்
போற்றத்தக்க வடிவத்தில் வணங்கக் கூடிய முறையை ‘சாக்த நெறி’ என்று
குறிப்பிடுவார்கள். ‘ஸர்வம் சக்தி மயம் ஜகத்’ என்று சாக்த நெறி பூரிப்புடன்
குறிப்பிடும். ஒரு ‘அணுவுக்குள் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்’
என்று மூன்று விதமான துகள்கள் அடங்கியிருப்பதைப்போல், சத்வம், ரஜஸ், தமஸ்
என்று மூன்றுவித சக்திகளின் ரூபங்கள் வழிபாட்டில் உள்ளன. அவை படைத்தல்,
காத்தல், அழித்தல் என்ற முக்குண இயல்புகளால் வடிவம் பெற்றவை. சரஸ்வதி,
லட்சுமி, பார்வதி என்ற அவர்களை வழிபடுமுறைகளில் பலவிதம் பரவி
நிறைந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொங்கல்
வைப்பது, முடியிறக்கம் செய்வது, அலகு குத்துவது, அக்னிச் சட்டி எடுப்பது,
தீ மிதிப்பது, என்று வழிபாட்டின் பலவித வடிவங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே
ஆகியிருக்கின்றன. ஆனால், இவை யாவும் பண்படாத மன எழுச்சியின் முரண்பாடான
வெளிப்பாடுகள் என்றே நவீன கால நாகரீகப் புதுமைவாதிகள் மேலோட்டமாக வாதிட்டு
வருகின்றனர். தற்கால வாழ்வில் உள்ள சிக்கலான பலவித வாழ்வியல்
பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருவர் தமது நேரத்தையும், பொருளையும்,
சக்தியையும் பயன்படுத்துகிறாரென்றால் அவ்விஷயம் அவருக்கு தனிப்பட்ட
வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையின் ஆழமான பின்னணி அதிலுள்ளது என்பதை நாம்
உணரலாம்.
சாக்த மந்திரங்களில் நாம் காணும் முதலாவது
மந்திர ஸ்துதி ‘ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்’. இது, பதினெண் புராணங்களில் ஒன்றான
பிரம்மாண்ட புராணத்தில் வருகிறது. அதில் ஹயக்ரீவருக்கும், அகத்தியருக்கும்
இடையே நடந்த உரையாடலில் விளைவாக ‘ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்’ என்ற மகத்தான
‘சாக்தக் கனி’ நமக்கு கிடைத்தது. ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை
வெள்ளிக்கிழமைகளிலோ, அல்லது அஷ்டமி திதிகளிலோ, தசாங்க தூபமிட்டு,
பால்பாயசம் நிவேதனம் செய்து, தாம்பூலம் முதலான பொருட்கள் சமர்ப்பித்து,
மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால், சகல விதமான நன்மைகளும் இல்லத்தில்
துள்ளி விளையாடும்.
‘அமுதத்தை உண்ட தேவர்களோ அடிக்கடி
துன்ப, துயரங் களுக்கு ஆளானார்கள். ஆனால், அவர்களைத் தவிக்கவைத்த, ஆலகால
விஷத்தை உண்ட சிவபெருமானோ நித்ய கல்யாணசுந்தரேஸ்வரராக, திருநீலகண்டராக
பொலிவுடன் விளங்க அன்னை உமாதேவியின் பதிபக்தியே காரணம்’ என்று ஆதிசங்கரர்
தமது சவுந்தர்ய லஹரியில் குறிப்பிடுவார். அத்தகைய மங்களகரமான சவுபாக்கிய
காரணியான லலிதாம்பிகையை, அவளது மந்திரம் கொண்டும் எளிய முறையில் பெண்கள்
பூஜித்து வரலாம். இந்த மந்திரம் சகல நன்மைகளையும் குடும்பத்தினர்
அனைவருக்கும் தர வல்லது. மந்திரம் வருமாறு:–
‘ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம’
இந்த
மந்திரத்தைச் சுமங்கலிப் பெண்கள் யாவருமே வீட்டிலோ, கோவிலிலோ தினமும் 27
முறைகள் ஜபித்து வருவது குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களையும்
ஏற்படுத்தும். மேலும், அவர்களது வாக்கில் ஒரு அபூர்வமான வசிய சக்தியையும்
உண்டாக்கி வைக்கும். 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் யாவருமே இதை
உச்சாடனம் செய்வதால் தோற்றத்தில் ஒரு பொலிவும், கல்விக் கேள்விகளில் நல்ல
தேர்ச்சியும் உண்டாகும்.
அடுத்து, வருவது அன்னை
மூகாம்பிகையின் தெய்வீகத்தன்மையை நமது அனுபவப்பூர்வமாக உணர வைக்கக்கூடிய
அற்புதமான மூல மந்திரமாகும். இதில் ஐம் என்ற பீஜமானது மாயையை விலக்கி,
உள்ளதை உள்ளவாறே உணரவைக்கக் கூடிய உன்னதமான ஸாரதாவித்யா மகா சக்தியின்
பீஜாட்சரமாகும். அது நான்கு முறைகள் இதில் பிரயோகிக்கப்பட்டிருப்பது நாம்
கவனிக்க வேண்டிய ஒன்றாகும். இதன் வடிவமைப்பு பூரண ஞான நிலையை வழங்கும்
தன்மையானது.
சர்வஞானபரமேஸ்வரியான உலக அன்னையின் மூலமாக, சகல ஞானமகாகாரணாதிகளின் தோற்றமாக உள்ளவற்றின் உண்மையான இயல்பை நமது ஞானக் கண்களுக்குக் காட்டியருளும் நன் மந்திரமே இது. இந்த ஜகத்ஜனனியின் அரிய மந்திரத்தைப் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் ஆரம்பித்துத் தினமும் 32 முறைகள் ஜபம் செய்துவர கல்விக்கேள்விகளில் சிறப்புறுவதை உணரலாம்.
அடுத்து நாம் காணவிருப்பது ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரியின் மீதமைந்த, துயர் நீக்கும் உயர் மந்திரமாகும்.
‘ஓம் தும் துர்காயை நமஹ’
என்ற இந்த மந்திரம், சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படும் சக்திபடைத்த அன்னையின் ஆற்றல் மிக்கதாகும். அதுவும் ராகு காலங்களில் இதன் சக்தி பூரணமாக வெளிப்படும். சகலவித சர்ப்ப, விஷ தோஷங்களையும் இம்மந்திரம் துடைத்தெறியக்கூடியது. உபவாசமிருந்து முறையாக உச்சாடனம் செய்வோர்கள் வாழ்வின் எதிர்மறை அனுபவங்கள் யாவும் அவர் இருக்கும் திசைப்பக்கம் கூட வாராது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரக்கூடிய ராகு காலங்களில், அன்னையின் திருக்கோவிலில் அவள் திரு முன்பு அமர்ந்து 27 அல்லது 108 முறைகள் ஜபம் செய்பவரது வாழ்வில் பூர்வகர்ம தோஷத்தால் வரும் சகல சங்கடங்களும் நிச்சயம் விலகி விடும். கூடுதலாக 54 அல்லது 108 எலுமிச்சம்பழத்தை இந்த மந்திரத்தைச் சொல்லியபடியே, ஒரு சிவப்பு அல்லது மஞ்சள் நூலில் மாலையாகக் கோர்த்து ராகு காலங்களில் தேவியின் திருக்கழுத்தில் செவ்வரளி மாலையுடன் சேர்த்து அணிவித்தால் வம்பு, வழக்குகள் யாவும் வந்த வழியே திரும்பி ஓடியே போய் விடும்.
அடுத்து ஸ்ரீகாளி தேவியின் அம்சத்தை உபாசனை செய்து நலம் பெறும் வகையில் அமைந்த ஒரு மந்திரத்தைக் காணலாம். இது ராகுவின் நட்சத்திரங்களிலும், ராகு காலங்களிலும் பிறந்தவர்களுக்கு மிகவும் நலம் புரியும்.
‘ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ’
இதைத் தினசரி வழிபாட்டில் பூஜை புனஸ்காரங்களோடு இணைத்துச் சொல்லி வரலாம். அல்லது தனிப்பட்ட வழிபாடாகவும் செய்து வரலாம். புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், மந்திரம், ஆராதனை என்ற வகையில் வழிபாட்டை அமைத்துக் கொள்ளலாம்.
அன்னை மகாசக்தியின் வழிபாட்டு முறைகளையோ, மந்திரங்களையோ சொல்ல முயன்றால் அது கடல்நீரை ஒரு குவளையில் அள்ளுவதாகவே அர்த்தம். எனவே இங்கு நாம் கண்டவற்றை அணுவினும் நுண்ணியதாகவே கருத வேண்டும்.
அர்த்தம் மிகுந்த நேர்த்திக்கடன்கள்
பொங்கல் வைப்பதின் நோக்கம், ஒரு விருப்பம் நிறைவேறியதன் வெளிப்பாடேயாகும். மேலும், தெய்வ காரியத்தை மையமாக வைத்து, யாவரும் தெய்வத்தின் குழந்தைகளே என்று உணர்வுப்பூர்வமாகப் பங்கு கொள்வதால், சமூக ஒற்றுமை வளர அது ஒரு காரணமாகிறது. பொங்கல் பொங்கி வழிவது போன்று, வாழ்வில் இனிமை நிறையட்டும் என்ற ஆன்மிக மனோதத்துவத்தின் வெளிப்பாடே இந்நிகழ்வு.
அலகு குத்துவது நமது பார்வைக்கு வேண்டுமானால் மிகவும் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதை வலியுடன் தாங்கக் கூடிய அவசியத்தின் பின்னால் என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். வாழ்வில் நிற்கதியாக நிற்கும் ஒரு குடும்பத்தலைவனின் அல்லது ஒரு தனிமனிதனின் துயரமான காலங்களில், சக மனிதர்களின் அன்பும் ஆதரவும் அற்ற நிலையில், வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்காமல், ஏதாவதொரு சக்தி நம்மை மீட்காதா? என்ற ஆழ்ந்த மன ஏக்கத்தின் வெளிப்பாடான தமது பிரார்த்தனை நிறைவேறியதன் காரணமே இருக்க முடியும். தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தைப்பூசத் திருவிழாவன்று காவடி, பால்குடம், அலகு குத்துதல் போன்ற சடங்குகள் உண்டு. மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தைப்பூசம் அன்று பொது விடுமுறையாகும்.
அடுத்து தீ மிதித்தல் என்ற சடங்கு அம்மனின் திருவிழாவில் பல இடங்களில் பிரசித்தம். தீ மிதித்தலுக்கு முன்பு 21 நாட்களோ, 12 நாட்களோ, அல்லது ஒரு வாரமோ தீ மிதிப்பவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது. உணவு, உடை, உறக்கம் ஆகிய அன்றாட வாழ்வுமுறைகளிலும் மனதிற்குக் கட்டுப்படான நெறிமுறைகளைப் பழக்கப் படுத்துகின்றனர். அதன் வழியாக உடலும் மனமும் சமச் சீர்மையைப் பெறுகின்றன. குளிப்பது, பேசுவது ஆகிய யாவிலும் பலவிதமான வரைமுறைகள் நடைமுறையிலுள்ளன. தீ மிதித்தலின்போது நமது காலின் கீழ் பகுதிகளில் உள்ள நரம்பு முனைகள் மின்தூண்டுதல்களைப் பெறுகின்றன.
பஞ்சபூத மயமான நமது உடல் பஞ்சபூத சக்திகளின் நேரடித் தொடர்பில் இருப்பது அந்த விரத காலத்தில் மட்டுமே. அதாவது, செருப்பணியாமலிருப்பது நிலத்தின் தொடர்பாகும். தினமும் இருமுறை குளிப்பதும், திரவ ஆகாரங்களே அதிகம் எடுத்துக் கொள்வது நீரின் தொடர்பாகும். காற்று, ஆகாயம் இவையிரண்டும், உண்ணா நோன்பிலும், மவுன விரதத்திலும் அடங்குகிறது.
முடியிறக்குதல் (மொட்டை போடுதல்) என்ற விஷயத்தில் பலவிதமான காரணகாரிய நுட்பங்கள் அடங்கியுள்ளன. அதை ஒரு புதிய ஆரம்பத்தின், தொடக்கமாகக் கொள்ளலாம். ஒரு குழந்தையின் ஒற்றைப்படை வயதுகளில் முடியிறக்குவது மரபாகும். மயிர்க்கால்களின் உறுதி பலப்படுவது ஒரு காரணமாக இருந்தாலும், சூழ்நிலையில் இருக்கும் தெய்வீகத்தன்மையை மூளையின் நரம்பு இயக்கங்களின் வாயிலாக உடல் முழுவதும் பரவ வழிவகை உண்டாவதே முக்கியக் காரணமாகும். முதலில், முதல் முடி அவரவரது குலதெய்வத்தின் சன்னிதியில் எடுப்பது வழக்கமாகும். ஒருவரது குலதெய்வமாகத் திகழும் தெய்வமூர்த்தமே அவர்களது பூர்வபுண்ணிய பலன்களை, குறைவின்றித் தரும் சக்தி படைத்ததாகும். பிறகுதான் அவரவரது இஷ்டதெய்வமோ, வழிபடு தெய்வமோ வழிபாட்டில் பங்குபெறுகின்றன. ஒருவரது பிறந்த நேரத்திற்கு உகந்த ஒரு நல்ல நாளில்தான் முடியிறக்கம் செய்ய வேண்டும்.
அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது ஒருவருடைய உடலின் ஆறு ஆதார சக்கரங்களும் ஒரே நேரத்தில் கருவறைக்கருகில் உள்ள சக்தி மண்டலத்துக்குள் பூமி மூலமாகத் தொடர்பு கொள்ளும் நிலையாகும். ஏழாவது சக்கரமான சஹஸ்ராரமோ, கருவறையில் வீற்றிருக்கும் தெய்வ திருஷ்டியில் நேரடியாகப் படக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறது. ஒரு பொருளின் ஈரத்தன்மையானது அதன் மின் ஈர்ப்புத் திறனை அதிகப்படுத்தக்கூடியதாகும். ஈர உடையிலோ அல்லது ஈர நிலத்திலோ ஒருவர் அங்கப் பிரதட்சணம் வருவற்கான முக்கியக் காரணம் அதுவேயாகும்